×

ஆன்லைன் தேர்வு முறைகளில் திடீர் மாற்றம் வீட்டில் இருந்து தேர்வு எழுதி விடைத்தாளை கல்லூரியில் தினசரி ஒப்படைக்க வேண்டும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. உத்தரவு


நாகர்கோவில், டிச.16:   வீட்டில் இருந்து தேர்வு எழுதிவிட்டு விடைத்தாளே சம்பந்தப்பட்ட கல்லூரியில் மாணவரே நேரில் சென்று தினசரி ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிப்பு ஒன்றை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு மாணவ மாணவியருக்கு நவம்பர் மாத தேர்வு மற்றும் ஏப்ரல் மாத துணை தேர்வுகளுக்கு கால அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வுகள் ஞாயிற்றுகிழமையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதிவிட்டு மாணவர்கள் அந்த விடைத்தாள்களை அன்றே தாங்கள் பயின்று வரும் கல்லூரிக்கு கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவரே நேரில் செல்ல வேண்டும். வேறு யாரிடமும் கொடுத்து அனுப்ப கூடாது.

ஆன்லைனில் விடைத்தாளை பதிவேற்றம் செய்வதற்கு பதிலாக இந்த நடைமுறையை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதே வேளையில் நீண்ட தூரத்தில் இருந்து கல்லூரிக்கு வருகை தர இயலாத மாணவர்கள் ஸ்பீடு போஸ்ட் அல்லது கூரியர் மூலமாக விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அன்றே அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளங்கலை மாணவர்கள் 3வது மற்றும் 5 வது செமஸ்டர், முதுகலை 3 வது செமஸ்டர் ஆகிவற்றின் தேர்வுகளை எழுத பதிவு நடைபெற்று வரும் நிலையில் தனித்தேர்வர்களுக்கு இளங்கலை 1, 2, 4, 6 மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 1, 2, 4 வது செமஸ்டர்களுக்கு பதிவு டிசம்பர் 22ம் தேதி மாலை 3 மணி முதல் தொடங்குகிறது.
காலை வேளையில் 9 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் வேளையில் 12.15 முதல் 3.15 மணி வரையும் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர் அதன் பின்னரே இந்த விடைத்தாள்களின் முகப்பு பக்கங்களை 3 நகல் எடுத்து பூர்த்தி செய்து விடைத்தாள் உடன் ஒன்றும், அது வைக்கின்ற கவர் மீதும், கல்லூரியில் ஒப்படைக்கும்போதும் என்று மூன்று இடங்களில் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியருக்கு தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை உட்பட நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தேர்வை எழுதிவிட்டு அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டிய மாணவர்கள், தேர்வு மையத்திற்கு தூரத்தில் உள்ள மாணவர்கள், அருகே ஜெராக்ஸ் கடை போன்றவை இல்லாத அல்லது திறக்காத பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு விடைத்தாள்களை அன்றே கல்லூரிகளில் ஒப்படைப்பது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும் என்று பேராசிரியர்கள் கூறி வருகின்றனர்.

பெற்றோர் குற்றச்சாட்டு
முதலில் ஆன்லைனில் அப்லோடு செய்தால் போதும் என்று கூறியிருந்த பல்கலைக்கழக நிர்வாகம் பின்னர் அந்த வசதியை நீக்கியுள்ளது. ஆன்லைனில் அப்லோடு செய்துவிட்டு பின்னர் மாணவர்கள் கல்லூரியில் வசதிப்படுகின்ற நேரத்தில் விடைத்தாள்களை ஒப்படைக்க வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால் ஏற்கனவே தேர்வு நடைபெற்றபோது மாணவர்கள் பலரும் விடைத்தாள்களை அப்லோடு செய்யாமலும், வினாத்தாள்களையும் இதர விபரங்களையும் அப்லோடு செய்ததாக புகார்கள் எழுந்திருந்தது. இந்தநிலையில் அதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்கவே பல்கலைக்கழகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில் ஆன்லைன் தேர்வு நடத்துகின்ற விதிமுறை மாணவர்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது என்றும், ஆன்லைன் தேர்வு எழுதிவிட்டு விடைத்தாளை நேரில் கொண்டு வழங்க வேண்டும் என்பது மாணவர்களை வீணாக அலைகழிக்கும் நடவடிக்கையாகும் என்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : home ,Manonmaniyam Sundaranagar University ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...