×

திருச்சியில் தொடர் பரபரப்பு

திருச்சி, டிச.16: திருச்சியில் 2வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மைக்கை போலீசார் பறித்ததால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நேற்று 20வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் வலுத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று 2ம் நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்திய 117 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை நடந்த பேச்சுவார்த்தையில் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் திமுக சார்பில் ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மதிமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேரன், காங்கிரஸ் சார்பில் மாவட்டத்தலைவர் ஜவஹர், வக்கீல் சரவணன், மக்கள் அதிகாரம் செழியன், மகஇக ஜீவா மற்றும் விவசாயிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் கோரிக்கைகளை விளக்கி மைக்கில் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென பாதுகாப்புக்கு நின்ற போலீசார், மைக்கில் பேச அனுமதி இல்லை என கூறி மைக்கை பறித்தனர். உடனே விவசாயிகள் சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களை துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்ததால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மைக்கை தராவிட்டால் நாளையுடன் முடியும் போராட்டம் தொடர் போராட்டமாக மாறும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் மீண்டும் காத்திருப்பு ேபாராட்டத்தை தொடர்ந்தனர்.

Tags : Trichy ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்