×

புரெவி புயல் மழையால்

தஞ்சை, டிச. 16: தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயல் மழையால் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பை விரைந்து முடித்து அறிக்கை அளிக்குமாறு வட்டார வேளாண் உதவி இயக்குனர்களுக்கு வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.
தஞ்சை மாவட்டத்தில் 2020- 21ம் ஆண்டு குறுவை பருவத்தில் 58,948 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி முடிந்துள்ளது. தற்போது சம்பா பருவத்தில் 80,978 எக்டேர் பரப்பளவிலும், தாளடி 52,661 எக்டேர் பரப்பளவிலும் என மொத்தம் 11,35,639 எக்டேர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது புரெவி புயல் மற்றும் மழையால் நெல் 11,729 எக்டேர் பரப்பளவிலும், மக்காச்சோளம் 124 எக்டேர் பரப்பளவிலும், நிலக்கடலை 60 எக்டேர் பரப்பளவிலும் என மொத்தம் 11,913 எக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயல் மழை காரணமாக பயிர் பாதித்த இடங்களை வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார். மதுக்கூர் வட்டாரத்தில் கண்ணனாறு உடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பெரியகோட்டை மற்றும் சொக்கனாவூர் கிராமங்களில் வயல்களில் பல்வேறு நிலைகளில் இருந்த பயிர்களை வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளிடம் பாதிப்பின் விவரங்களை கேட்டறிந்தார்.

இதைதொடர்ந்து ஒரத்தநாடு வட்டாரத்தில் உளூர் கிராமத்தில் அறுவடைக்கு ஒரு வாரமே உள்ள பயிர்கள் முழுவதும சாய்ந்து முற்றிய நெற்கதிர்கள் வயலிலேயே முளைத்து இருப்பதை பார்வையிட்டார். கணக்கெடுக்கும் பணியை விரைந்து முடித்து உரிய படிவத்தில் அறிக்கையை சமர்பிக்குமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார். அனைத்து வட்டாரங்களிலும் புயல் காரணமாக பயிர் சேத கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் பயிர் சேத நிலை குறித்து வேளாண்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆலோசிக்கப்பட்டது.
இதில் கலெக்டர் கோவிந்தராவ் பேசும்போது, வேளாண்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து புரெவி புயல் பாதித்த பகுதிகளில் கிராமம் மற்றும் விவசாயிகள் வாரியாக சர்வே எண், பரப்பு, விவசாயிகளின் அடிப்படை விவரங்களான வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் எண், குடும்ப அட்டை நகல், பாதித்த நிலங்களின் அடங்கிய ஆவணங்களை சேகரித்து விரைந்து கணக்கெடுக்கும் பணியை முடிக்குமாறு அறிவுறுத்தினார். தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமீனாட்சி, வேளாண் இணை இயக்குனர் ஜெஸ்டின், உதவி ஆட்சியர் அமித் (பயிற்சி), சார் ஆட்சியர் பாலச்சந்தர் உட்பட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அரசுக்கு 2 நாட்களில் அறிக்கை சமர்பிக்கப்படும்
தஞ்சையில் தமிழக வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் நிவர் புயல் மழையால் 12.911 எக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் மழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் மழை காரணமாக தமிழகத்தில் 3.05 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர்களில் மழைநீர் தேங்கியது. இதில் நீர் வடிந்த பிறகு தற்போதைய கணக்கீட்டின்படி 2.65 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 1.35 லட்சம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில் இதுவரை 11.730 எக்டேர் வரை பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு பணிகள் விரைவாக நடந்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 50 சதவீத பணிள் முடிந்து விட்டது. இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு அரசுக்கு பாதிப்பின் விவரம் அறிக்கையாக சமர்பிக்கப்படும். பொதுவாக 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிருக்கு அரசு இழப்பீட்டுக்கு பரிந்துரை செய்யப்படும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 90 சதவீதம் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றார். பயிர் பாதிப்பு கணக்கெடுப்பை விரைந்து முடித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

Tags : storm ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...