×

ஸ்ரீரங்கத்தில் நாளை பவித்ரோற்சவம்

 

திருச்சி: 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதம் பவித்ரோற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் நாளை(3ம் தேதி) தொடங்குகிறது. முதல் திருநாளான நாளை காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு யாகசாலை வந்தடைவார். அதன்பின்னர் சிறப்பு திருவாராதனம் கண்டருள்கிறார். மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் நடைபெறும். இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ரோற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பவித்ரோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை நாளை மறுநாள்(4ம் தேதி) மதியம் நடக்கிறது.

மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பூச்சாண்டி சேவையை பக்தர்கள் தரிசிக்கலாம். பூச்சாண்டி சேவையின்போது மூலவர் ரங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேனி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடுகின்றனர். வரும் 11ம் தேதி சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி, திருமஞ்சனத்துடன் விழா நிறைவடைகிறது.

Tags : Pavithraotsavam ,Srirangam ,Trichy ,Srirangam Ranganatha Temple ,Avani-Purattasi ,
× RELATED அரசு பணிகளில் இட ஒதுக்கீடு...