×

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்தாமரைகுளம், செப். 2: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 22ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. கடந்த 29ம் தேதி 8ம் திருவிழா அன்று அய்யா வைகுண்ட சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 11வது நாளான நேற்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பச்சை பல்லாக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட நிகழ்ச்சிக்கு குரு பையன் ராஜா தலைமை வகித்தார். குருமார்கள் பால் பையன், பையன் காமராஜ், பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும் போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெற்றது. இன்று அதிகாலை அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து திருக்கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைமைபதி குருமார்கள் செய்திருந்தனர்.

Tags : Avani festival procession ,Samithopp Ayya Vaikundaswamy ,Thenthamaraikulam ,Avani festival ,Samithopp Ayya ,Vaikundaswamy ,
× RELATED ஓய்வூதியர் தின விழா