×

திருமங்கலத்தில் பொக்லைன் மோதியதில் மின் கம்பம் சாய்ந்தது: பலமணி நேரம் மின்தடை

திருமங்கலம், செப். 2: திருமங்கலம் விமானநிலையம் ரோட்டில் பொக்லைன் இயந்திரம் மோதியதால் மின்கம்பம் சாய்ந்து கம்பிகள் அறுந்தன. இதனால் புறநகர் பகுதியில் பலமணி நேரம் மின்தடை ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. திருமங்கலம் – மதுரை விமான நிலையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் காமராஜபுரம் பகுதியில் வேளாண்மை அலுவலகம் அருகே புதிய பாலத்தினையொட்டியுள்ள வாறுகால் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நேற்று தோண்டப்பட்டது. இந்த பணிகளின்போது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது காலை 11 மணியளவில் பொக்லைன் இயந்திரம் மோதியது. இதில் காமராஜபுரம், கற்பகம்நகர், ஆறுமுகம் வடபகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் இரண்டு மின்கம்பங்கள் ரோட்டில் சாய்ந்தது.

இதில் ஒரு மின்கம்பத்தில் இருந்த கம்பிகள் திருமங்கலம் – மதுரை விமான நிலையம் செல்லும் ரோட்டில் அறுந்து விழுந்தன. அந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் கடந்து செல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சென்று ெகாண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் அளித்த புகாரினை தொடர்ந்து, உடனடியாக மின்வாரியம் அப்பகுதிக்கான மின்சாரத்தினை துண்டித்தது. இதனால் திருமங்கலத்தின் புறநகர் பகுதியான காமராஜபுரம், கற்பகநகர், ஆறுமுகம் வடபகுதி, சோனைமீனா நகர், மதுராசிட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

நடுரோட்டில் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் திருமங்கலம் – மதுரை விமானநிலையம் ரோட்டில் வாகன போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து அவனியாபுரம், மண்டேலா நகர் வழியாக திருமங்கலம் வரும் டவுன் பஸ்கள் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல முடியாமல் வேளாண்மை அலுவலகத்துடன் நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சரிசெய்யும் பணிகளை துவங்கினர். மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், அதன்பிறகு புறநகர் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் விமான நிலையம் ரோட்டில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 20 நாள்களுக்கு முன்பு இப்பகுதியின் அருகே குடிநீர் குழாயினை பொக்லைன் இயந்திரம் உடைத்ததால் நாங்கள் பல நாட்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது மின்சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மேம்பால பணிகளைமேற்கொள்வோர், உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தவேண்டும்’’ என்றனர்.

Tags : Thirumangalam ,Thirumangalam Airport Road ,Madurai Airport Road ,
× RELATED ஓய்வூதியர் தின விழா