ஊட்டி-கைகாட்டி வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

ஊட்டி, டிச.16: மஞ்சூர், பெங்கால்மட்டம், சாம்ராஜ், மைனலை மட்டம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தினமும் பல்வேறு பணிகளுக்காக ஊட்டி வருகின்றனர். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் வந்து செல்வது வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த சில மாதங்களாக அரசு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது, அனைத்து பகுதிகளிலும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், ஒரு சில பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழித்தடத்தில் மாலை நேரங்களில் குறைந்தளவே அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஊட்டியில் இருந்து கீழ்குந்தா பகுதிக்கு மாலை 5.15 மணிக்கு ஒரு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பிற்கு பின் இந்த பஸ் இயக்கப்படுவதில்லை.

மாலை 4.45 மணிக்கு கிண்ணக்கொரைக்கு செல்லும் பஸ் சென்ற பின், இவ்வழித்தடத்தில் மாலை 6.15 மணி வரை பஸ்கள் ஏதும் செல்வதில்லை. இதனால், ஒன்றரை மணி நேரம் இவ்வழித்தடத்தில் செல்லும் பயணிகள் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டி உள்ளது.

பயணிகள் நலன் கருதி, 5.15 மணிக்கு இயக்கப்பட்டு வந்த கீழ்குந்தா பஸ் மீண்டும் ஊட்டியில் இருந்து இயக்க வேண்டும் அல்லது 5.45 மணிக்கு ஊட்டியில் இருந்து தங்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்சை கைகாட்டி, பெங்கால் மட்டம் வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஊட்டியில் இருந்து கெத்தைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக கெத்தைக்கு இயக்கப்படாமல் உள்ளது. தற்போது இந்த பஸ் ஓணிக்கண்டி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மீண்டும் இந்த பஸ்சை கெத்தை வரை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>