×

திம்பம் மலைப்பாதையில் 2 லாரிகள் பழுதாகி நின்றன

சத்தியமங்கலம், டிச.16:  திம்பம் மலைப்பாதையில் 2 லாரிகள் பழுதாகி நின்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து இருந்து வருகிறது.
இந்நிலையில், மேட்டூரிலிருந்து ஆசிட் பாரம் ஏற்றிய லாரி கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது 25வது கொண்டை ஊசி வளைவில் லாரியின் முன்பக்க அச்சு முறிந்து நகர முடியாமல் நின்றது.
 
இதனால், மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த ஆசனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பண்ணாரியிலிருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை நகர்த்தும் பணி நடைபெற்றது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் இரவு 12 மணியளவில் லாரி  நகர்த்தி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக, தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே  3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல், நேற்று காலை 11 மணி அளவில் அரியலூரில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி கர்நாடக மாநிலம் மைசூர் நோக்கி திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. 8வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது.

இதனால், நேற்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மதியம் 2 மணி அளவில் போக்குவரத்தை சரி செய்யப்பட்டது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை தொடர்ந்து திம்பம் மலைப் பாதையில் அனுமதிப்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை கண்டறிந்து திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hill road ,Thimphu ,
× RELATED தேர்தல் முடிந்தவுடன் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்பு தொடங்குமா?