டோல்கேட்டை உடைத்த வழக்கில் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் தவாக தலைவர் வேல்முருகன் ஆஜர் ஜனவரி 5ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

உளுந்தூர்பேட்டை, டிச. 16: உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட்டை அடித்து உடைத்து சூறையாடிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, சுங்கச்சாவடிக்கு வரிகொடா இயக்கம் சார்பில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது  திடீரென டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்டது.  இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக  வேல்முருகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிபதி சண்முகநாதன் முன்னிலையில் வேல்முருகன் உள்ளிட்ட 8 பேர் ஆஜராகினர். இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் ஜனவரி 5ம் தேதி நீதிமன்றத்தில் அனைவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆவேன் நீதிமன்றத்தில் ஆஜாராகிவிட்டு வெளியே வந்த வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டோல்கேட்டை உடைத்ததாக என் மீது திட்டமிட்டு பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டத்தை  நடத்தி வருவதால் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டத்தின் துணை கொண்டு நான் உள்ளிட்ட அனைவரும் நிரபராதி என விடுதலையாவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் தற்போது கந்துவட்டி, மீட்டர் வட்டியால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவது வேதனை அளிக்கிறது. விவசாய கடன்களை வசூலிக்க அடியாட்களை கொண்டு மிரட்டி வருவதால் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் அருகே 5 பேர் கந்துவட்டியால் உயிரிழந்தது வேதனையான ஒன்றாகும். இதுபோன்ற கந்துவட்டி, மீட்டர் வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>