×

பாவூர்சத்திரம் அருகே கல்லால் தாக்கி கொலை தொழிலாளி உடலை வாங்கமறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்

கடையம்,டிச.16:  தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே  கல்யாணிபுரம் நல்வாழ்வு  ஆசிரமம் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுடலைமணி (27). கூலி தொழிலாளியான  இவருக்கும், புளியங்குடியைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண்ணுக்கும் கடந்த 6  ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் ஏற்பட்ட  கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து தனது அக்கா வீடான வெய்க்காலிபட்டியில் வசித்துவந்த சுடலைமணி பாவூர்சத்திரத்தில்  உள்ள ஒரு மட்டன் கடையில் கூலித் தொழிலாளியாக வேலைக்கு சென்றுவந்தார். கடந்த இருதினங்களுக்கு முன்பு  மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய சுடலைமணியை உடன் வேலை பார்க்கும்  ஊழியர் ஒருவர் பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் இறக்கிவிட்டு  சென்றார். அங்கிருந்து உறவினர் வீட்டிற்கு சென்ற சுடலைமணி வழியில்  ஆவுடையானூர் மாடியனூர் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கல்லால் அடித்து  கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த பாவூர்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தென்காசி வந்த சுடலைமணியின் தந்தை மற்றும் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து சமரசப்படுத்திய கலெக்டர்  சமீரன், குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவர் என உறுதியளித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த உறவினர்கள், குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறியவாறு சுடலைமணியின் சொந்த ஊரான கல்யாணிபுரத்திற்கு சென்றனர். பின்னர் சுடலைமணி வீட்டின் முன்பாக உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் திராவிட தமிழர் கட்சியின் வக்கீல் அணி  மாநில செயலாளர் இளமாறன்கோபால்,  தென்மண்டல தலைவர் பொதிகை ஆதவன், மாவட்டச் செயலாளர் கருவீரபாண்டியன்,  மாவட்ட நிதி செயலாளர் செந்தில், மாநில பொதுச்செயலாளர் கதிரவன் உள்ளிட்டோர் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், ஆழ்வார்குறிச்சி எஸ்ஐ தமிழரசன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் ஆவேசமடைந்த உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Relatives ,death ,Pavoorchatram ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...