×

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம் ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, டிச.16: ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம் பல்லாந்தாங்கல் ஊராட்சியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பல்லாந்தாங்கல் கூட்ரோட்டில் உள்ள எம்ஜிஆர் நகரில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8.30 மணியளவில் ஆரணி- வந்தவாசி சாலை பல்லாந்தாங்கல் கூட்ரோட்டில் காலி குடங்களுடன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். ஆனால் பொதுமக்கள், குடிநீர் வழங்கும் வரை மறியலை கைவிடமாட்டோம் எனக்கூறி கலைந்து செல்ல மறுத்தனர்.இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் வேலு அங்கு வந்து, பைப்லைன் உடைந்துவிட்டதால் குடிநீர் விநியோகிக்க முடியவில்லை. ஓரிரு நாட்களில் பைப்பை சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,blockade ,Arani ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...