×

மதம் மாறிய அடையாளத்தை மறைத்து அரசியலமைப்பின் உரிமைகளை அனுபவிப்பதை ஏற்க முடியாது: அதிமுக பேரூராட்சி தலைவர் தகுதி நீக்கம் உறுதி

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் ஐயப்பன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2022ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேரூர் பேரூராட்சி 8வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். பெண்கள்- பொதுப்பிரிவினருக்கான 2வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமுதா ராணி வெற்றி பெற்றார். பேரூராட்சி தலைவருக்கான பதவி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் அமுதா ராணிக்கு இப்பதவி கிடைத்தது. அமுதா ராணி 2005ல் கிறிஸ்தவராக மாறி, அம்மத முறைப்படி திருமணம் செய்தார். இதை மறைத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பெற்றுள்ளார். பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் வேறு மதத்திற்கு மாறியவுடன், அவர் பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியாது. இது சட்டவிரோதம். எனவே, அமுதா ராணியின் பட்டியல் இன சாதி சான்றிதழை ரத்து செய்து, அவரை தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி, இது அரசியல் அமைப்பு சட்டத்தை ஏமாற்றும் செயல் என்பதால், தேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதா ராணியை தகுதி நீக்கம் செய்து அறிவிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, அமுதா ராணி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி ராஜசேகர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கை அமுதா ராணி மற்றும் ஐயப்பன் ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட வழக்காக பார்க்க முடியாது.

உண்மையான பிரச்னை என்னவென்றால், அமுதா ராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஒருவர் ஒரு மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாறுவது என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமை. ஆனால், ஞானஸ்நானத்திற்குப் பிறகு, புதிய அடையாளத்தை மறைத்து, அரசியலமைப்பால் வழங்கப்பட்ட உரிமைகளை அனுபவிக்கும் நோக்கத்திற்காக, பட்டியல் இன சமூகம் என்ற நிலையில் தொடர்வது போல் பாசாங்கு செய்யும்போது தான் சிக்கல் எழுகிறது. கிறிஸ்தவ மதத்தை தழுவி உள்ளது. ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Tags : AIADMK Town Panchayat ,Madurai ,Kanyakumari District ,Therur Town ,Panchayat ,Councilor ,Ayyappan ,Court ,Therur Town Panchayat ,DMK ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...