×

ஜிப்மர் தினக்கூலி ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் - முற்றுகை 3 மணி நேரம் பணிகள் பாதிப்பு

புதுச்சேரி, டிச. 15: புதுச்சேரி, கோரிமேடு, ஜிப்மரில் 500க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள்  15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.  ஹெல்பர், துப்புரவு, சலவை,  சமையல், சவக்கிடங்கு உதவி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இவர்கள் டெல்லி எய்ம்ஸ் ஊழியர்களுக்கு நிகரான ஊதியத்தை தங்களுக்கு வழங்க  வேண்டுமென நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.கோரிக்கையை ஜிப்மர்  நிர்வாகம் ஏற்காததால், நேற்று 500க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள்  நேற்று திடீரென பணியை புறக்கணித்து  முற்றுகையில் ஈடுபட்டனர். காலை 7 மணி  முதல் ஒட்டுமொத்தமாக தினக்கூலி ஊழியர்கள் அனைவரும் சீருடையுடன்  போராட்டத்தில் குதித்ததால் நேற்று உட்புற, வெளிப்புற சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டன.  

தகவலறிந்து வந்த கோரிமேடு போலீசார் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தைக்காக ஜிப்மர் இயக்குனரிடம்  போராட்டக்குழு முக்கிய நிர்வாகிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது  ஜிப்மர் நிரந்தர ஊழியர்களுக்கு நிகராக பணியாற்றும் தினக்கூலிகளான  தங்களுக்கு ரூ.18 ஆயிரமாக ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும், கடந்த 8  ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்படும் பிஎப் பணத்தை தங்களது பிஎப் கணக்கில்  உடனே நிர்வாகம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர்.இதை ஏற்றுக் கொண்ட இயக்குனர் ராகேஷ் அகர்வால் அடுத்த 15 நாட்களில்  நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதையடுத்து 3 மணி நேரமாக நீடித்த  முற்றுகையை கைவிட்ட தினக்கூலி ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்பினர்.

Tags : strike ,wage workers ,Zimmer ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து