×

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரை நீக்க வீடு, வீடாக விசாரணை

நாங்குநேரி, டிச. 15: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயரை நீக்கும் பணி, தினகரன் செய்தி எதிரொலியாக தீவிரமாக நடந்து வருகிறது.  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் தேர்தல் ஆணையத்தால் நடந்தது. இதில் தற்போதைய வாக்காளர் பட்டியல், பொதுமக்களின் பார்வைக்காக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் புதிய வாக்காளர் சேர்ப்பு திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களும் வழங்கப்பட்டன. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தற்போதைய வாக்காளர் பட்டியலில் பெரும்பாலான இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் பெயர் இன்னும் நீக்கப்படாமல் அப்படியே இருந்தது. குறிப்பாக நாங்குநேரி பேரூராட்சி 15வது வார்டில் மட்டும் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமான 10க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் வீட்டை காலி செய்து விட்டு வெளியூரில் வசிக்கும் பலரது பெயர்களும் பட்டியலில் தொடர்ந்து பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்பு இதுபோன்ற சிறப்பு முகாம்களில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர். எனவே வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு வார்டுகள் வாரியாக சிறப்பு திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரனில் கடந்த 22ம் தேதி செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  இறந்தவர்களின் பெயர் நீக்குவதற்கு வசதியாக 7ம் எண் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பகுதிகளில் இருந்தவர்கள் விவரங்களை சேகரித்து வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று இறந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதேபோல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஊரில் வசிக்காத பலரது பெயர்களையும் கண்டறிந்து நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளன.

Tags : House ,deceased ,assembly constituency ,Nanguneri ,
× RELATED சிறுமி கொலையை கண்டித்து தொடர்...