வேட்டவலம், டிச.15: வேட்டவலம் அடுத்த நெய்வாநத்தம் ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தில் ஒருங்கிணைந்த கல்வி சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பணி நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர்கள் வாசுதேவன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் இருளர் குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 10ம் வகுப்பில் 304 மதிப்பெண் பெற்று குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக படிப்பை தொடராமல் இடையில் நின்ற நித்யா என்ற மாணவியை கண்டறிந்தனர். பின்னர், நித்யாவை வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு அறிவியல் பிரிவில் சேர்த்தனர். இதில் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) புளோரென்சியா மேரி, பள்ளி ஆசிரியர்கள் திருமுருகன், முருகையன், சிவசங்கர், சுஜாதா, உடற்கல்வி ஆசிரியர் னிவாசன் மற்றும் நடுப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.