வேர் அழுகல் நோயில் இருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி? தோட்டக்கலை உதவி இயக்குனர் விளக்கம்

வந்தவாசி, டிச.15: வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குனர் பெ.வளர்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மழை, விவசாயத்துக்கு அடிப்படையானது. அதேநேரத்தில் அது, ஆபத்தையும் உருவாக்கும். ‘மழை வரும் முன்னே நோய்கள் வரும் பின்னே’ என்றும் சொல்வார்கள். வைரஸ் போன்ற கிருமிகளின் பெருக்கத்துக்கு பருவ மழைக்காலம் ஏற்றதாக இருப்பதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.நாற்று உற்பத்தி: நாற்றங்கால் நடவிற்கு முன்பு மழைக்காலத்தில் தை பட்ட சாகுபடிக்காக காய்கறி நாற்றங்கால் தயாரிப்பு, பழக்கன்றுகள் நடவு பணிகளில் ஈடுபடும்போது பயிர்களுக்கு வரக்கூடிய முக்கிய நோய் வேர் அழுகல்.காய்கறி பயிர்களான கத்திரி, தக்காளி, வெண்டை நாற்றங்கால்களை அதிக தண்ணீர் தேங்காத அளவுக்கு சற்று உயரமாக அமைக்க வேண்டும். அதிகளவு தண்ணீர் நாற்றங்காலில் தேங்கினால், நாற்றுகளின் தண்டு பகுதிகளில் குறிப்பாக தரையை ஒட்டியுள்ள தண்டு பகுதிகளில் அழுகல் நோய் வரும்.

அதிக மழை பெய்யும்போது, தண்ணீர் தேங்குவதை தவிர்க்க முடியாது. அதனால், நாற்றங்கால் படுக்கை தயாரிக்கும்போதே தொழுவுரத்துடன் சூடோமோனஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியைச் சேர்த்து கொள்ள வேண்டும். 10 அடி நீளம், 3 அடி அகலம் உள்ள படுக்கைக்கு 200 கிராம் போதுமானது.பழக்கன்றுகள் நடவு செய்யும்போது நடவு குழியில் 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 25 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை இட்டு நடவு செய்ய வேண்டும். இவற்றை கடைபிடித்தாலே வேர் அழுகலில் இருந்து செடிகளை பாதுகாக்கலாம். பெரும்பாலான பகுதிகளில் தற்போது நிலவும் தொடர் மழை, பனி மூட்டமான சூழ்நிலை காரணமாக சில பயிர்களில் ஒரு சில பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளன. தக்காளி செடிகளில் இலைக்கருகல் நோய், கத்திரியில் காய்ப்புழு தாக்குதலும் தென்பட வாய்ப்புள்ளது. ஏக்கருக்கு 5 இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும். கத்திரியில், ‘டிரைக்கோகிரம்மா பிரோட்டியோசம் என்ற முட்டை ஒட்டுண்ணியை 15 நாட்கள் இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு ஒரு சி.சி. என தொடர்ந்து கட்டிவிடுவதன் மூலம் காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>