ஜனவரி முதல் புதிய நடைமுறை அமல் காசோலை மோசடி தடுக்க ‘பாசிட்டிவ் பே’ வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

வேலூர், டிச.15: காசோலை மோசடிகளை தடுக்கும் வகையில், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ‘பாசிட்டிவ் பே’ என்ற புதிய நடைமுறையை வங்கிகளில் அமல்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பதிவாகும் பண மோசடி வழக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் காசோலை சம்பந்தப்பட்ட மோசடி வழக்குகளாக உள்ளன. இதனை தவிர்க்கும் வகையில் கடந்த 2010ம் ஆண்டு சிடிஎஸ் பாதுகாப்பு அம்சங்கள அடங்கிய காசோலை பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மேலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘பாசிட்டிவ் பே’ என்ற நடைமுறை காசோலை மோசடிகளை தடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘பாசிட்டிவ் பே பை இன்பார்ம் டெசிசன்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த நடைமுறையின்படி, காசோலையை வழங்குபவர்கள் அதன் எண், தொகை, நாள், காசோலையை பெறும் நபர், காசோலையின் முன் மற்றும் பின்பக்க படம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ₹50 ஆயிரத்துக்கும் அதிகமான தொகைக்காக வழங்கப்படும் காசோலைகளில் இந்த விவரங்களை சரிபார்த்த பின்னரே வங்கிகள் அந்த தொகையை வழங்கும். இது வாடிக்கையாளர்களுக்கு காசோலை பயன்பாட்டில் அதிக பாதுகாப்பை வழங்கும் என்றும், ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வங்கிகளிலும் இம்முறையை பின்பற்றும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>