×

தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்துடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் இடையே திறன் மேம்பாட்டிற்கான தொழிற் பாடங்கள் வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் இணைந்து திறன் மேம்பாட்டிற்கான தொழிற் பாடங்கள் வழங்குவதற்கு 5 ஆண்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தொழிற் சார்ந்த படிப்புகளை சான்றிதழ் பாடங்களாகவும், பட்டய பாடங்களாகவும் வழங்க உள்ளன.

கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு மற்றும் இத்துறை சார்ந்த தொழில்களுக்கு தேவையான திறன் மிகு பணியாளர்களை உருவாக்கிடவும் அதன் மூலம் உரிய வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடவும், சுய வேலைவாய்ப்பினை வழங்கிடவும், இந்த 5 ஆண்டுகால புரிந்துணர்வின் மூலம் வழிவகை மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக 2 சான்றிதழ் பயிற்சிகள் முறையே கோழி வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் உற்பத்தியும் மேலும் 2 பட்டய படிப்புகள் முறையே உணவு, உணவு பானங்கள் உற்பத்தி மற்றும் பேக்கரி, சாக்லேட் பொருட்கள் உற்பத்தி ஆகிய தொழிற் சார்ந்த படிப்புகள் வழங்கப்பட உள்ளன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தேவைக்கேற்ப புதிய கல்வி பாடங்களையும், புதிய தொழிற் சார்ந்த பாடத்திட்டங்களையும் உருவாக்கிட வழிவகை செய்யப்படும். இந்திய அரசின், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் தலைவர் அகிலேஷ் மிஸ்ரா முன்னிலையில் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) நரேந்திர பாபு, தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் தொழிற்கல்வி இயக்குநர் கிரி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Veterinary University ,National Institute of Open Schools ,Chennai ,MoU ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...