×

சென்னையில் சிகிச்சை பெறும் ஜி.கே.மணியை சந்தித்து உடல்நலம் விசாரித்த ராமதாஸ் வெறிச்சோடி கிடக்கும் தைலாபுரம்

திண்டிவனம், ஆக. 30: சென்னையில் சிசிச்சை பெற்றுவரும் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணியை தனது மூத்த மகள் காந்தியுடன் சென்று ராமதாஸ் நலம் விசாரித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே 7 மாதங்களை கடந்த நிலையிலும் அதிகார மோதல் நீடித்து வருகிறது. செயல் தலைவர் பதவியை ஏற்க மறுத்து தனிஅணியாக செயல்பட்டு வரும் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு தனது மூத்த மகள் காந்தியை, அந்த பதவியில் நியமிக்க ராமதாஸ் காய் நகர்த்தி வருகிறார். இதன் முன்ேனாட்டமாகதான் மாநில தலைமை நிர்வாக குழு உறுப்பினராக காந்தியை நியமித்தார். அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு விதித்த காலக்கெடு இன்று (30ம்தேதி) முடிவடையும் நிலையில், இதுவரை அன்புமணி தரப்பில் எந்த விளக்கமும் தரப்பட வில்லை. காலக்கெடு முடிந்ததும் அன்புமணியை பதவியிலிருந்து நீக்கிவிட்டு காந்தியை செயல் தலைவராக்கும் நடவடிக்கையில் ராமதாஸ் இறங்குவார் என தகவல் பரவுகிறது.

இதனிடையே வியாழன் செய்தியாளர்கள் சந்திப்பை 2வது வாரமாக ரத்து செய்த ராமதாஸ், நேற்று முன்தினம் தனது மூத்த மகள் காந்தியுடன் திடீரென சென்னை புறப்பட்டுச் சென்றார். இளைய மகள் கவிதா வீட்டில் தங்கிய அவர், காந்தியுடன் வானகரத்தில் சிகிச்சை பெற்றுவரும் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும் சில முக்கிய நபர்களை ரகசியமாக சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சென்னை பயணத்தை முடித்து இன்று தைலாபுரம் திரும்புவார் என தெரிகிறது.

இந்த நிலையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியபிறகு தைலாபுரத்துக்கு நிர்வாகிகள் வருவதை தவிர்த்து விட்டனர். யாரையும் சந்திக்க ராமதாஸ் விரும்பாத நிலையில் தோட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மீண்டும் வழக்கமான நிர்கிகள் சந்திப்பை ராமதாஸ் தொடங்குவார் என்று தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஒட்டுகேட்பு விவகாரத்தில் முழுமையான விடை கிடைக்காத நிலையில், தேர்தல் ஆணையத்தில் தந்தை, மகன் தரப்பு தனித்தனியாக கட்சிக்கான உரிமை கோரியுள்ளது. அடுத்ததாக நீதிமன்றம் வரை பாமக பொதுக்குழு விவகாரம் சென்ற நிலையிலும், அன்புமணிக்கு தடை விதிக்காததால் இவ்விவகாரத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விழாக்களில் போட்டி போட்டு பங்கேற்கும் காந்தி, சவுமியா
தென்சென்னை நீலாங்கரையில் நடந்த வேளச்சேரி பாமக நிர்வாகி சுஜாதா தேவராஜ் இல்ல திருமண விழாவில் ராமதாசின் மூத்த மகளான காந்தி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து சவுமியா அன்புமணி அங்கு சென்று புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் செய்யாறில் மாவட்டத் துணைத் தலைவர் ரகுபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் காந்தியும், சவுமியா அன்புமணியும் போட்டி போட்டு பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே அரசியல், திருமண விழாக்களில் பங்கேற்காமல் இருந்த காந்தி தனது தந்தையின் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் அவரது சார்பில் தற்போது பாமக நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் பங்கேற்று வருவதால் பாமகவில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் ராமதாசுடன் காந்தி படத்தையும் பேனர்களில் போடத் தொடங்கி உள்ளனர்.

Tags : Ramadoss ,G.K. Mani ,Chennai ,Thindivanam ,PMK ,president ,Gandhi ,Anbumani… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா