×

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது

காஞ்சிபுரம்: டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில், எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் தலைமையில் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் திமுக அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, காஞ்சி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் மதியழகன், நகர தலைவர் இராம.நீராளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை, போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் காவலான்கேட் பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவாக காத்திருக்கும் போராட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட மதிமுக நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஜி.அருள் உள்பட சுமார் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை, திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் ஊர்வலமாக சென்றனர்.

இதில், மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர், மதிமுக மாவட்ட செயலாளர் பார்த்திபன் உள்பட விவசாய சங்க மாவட்ட தலைவர் மோகனன், மாதர் சங்க மாநில செயலாளர் பிரமிளா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அவர்களை, அரசு மருத்துவமனை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையொட்டி, செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் திடீரென அமர்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், மல்லை சத்யா உள்பட 500 பேரை கைது செய்து, அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Hundreds ,DMK ,Delhi ,
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...