×

மின் அழுத்தத்தால் டிவி, மிக்சி வெடித்தது மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: பெரியபாளையத்தில் பரபரப்பு

ஊத்துக்கோட்டை, டிச.15: பெரியபாளையத்தில் உயர் மின் அழுத்தத்தால் டிவி, மிக்சி, கிரைண்டர்கள் வெடித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் அவற்றை மின்வாரிய அலுவலகம் முன்பு வைத்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும், இந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

இதை சீரமைக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறியும், சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் திடீரென மின் தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்துள்ளது. அப்போது, மின்சாரம் உயர் மின் அழுத்த மின்சாரமாக  வந்ததால்  எதிர்பாராத விதமாக அப்பகுதியின் வீடுகளில் இருந்த மிக்சி, கிரைண்டர், டிவிக்கள் மற்றும் மின் விளக்குகள் ஆகியவை வெடித்து சிதறியது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பெரியபாளையம் மின்வாரிய அலுவலகம் முன்பு பழுதடைந்த மிக்சி, கிரைண்டர் மற்றும்  டிவிக்களை வைத்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகலறிந்த, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் இந்த பிரச்னைக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Mixi ,TV ,siege ,Periyapalayam ,
× RELATED டி.டி.யில் கேரளாவை தவறான விதத்தில்...