*கலெக்டர் பாராட்டு
திருச்செங்கோடு : ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 மாணவர்கள் சர்வதேச தூதர்களாக தேர்வு செய்யப்பட்டதாக, கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரிகள் வளாகத்தில், நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பின்னர், கலெக்டர் துர்காமூர்த்தி பேசியதாவது: திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட 12ம் வகுப்பு முடித்து, உயர்கல்வியில் சேராத மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
உயர் கல்வியில் 2022-23ம் கல்வியாண்டில் 88% மாணவர்களும், 2023-24ம் கல்வியாண்டில் 94% மாணவர்களும் சேர்க்கை பெற்று கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். 2024-25ம் கல்வியாண்டில் 9,470 மாணவ, மாணவிகளில் 8,727 மாணவர்கள், தற்போது உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.
இம்மாணவர்களில் 445 மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். 45 மாணவர்கள் இந்திய முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்ந்து அரசு நிதி உதவியுடன் பயின்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் வழங்கப்படும் கடனுதவி உள்ளிட்ட, தமிழ்நாடு அரசு நலத்திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், உயர்கல்வியில் சேராத 954 மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நேரடியாக வீட்டிற்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான வளர்ச்சி கவுன்சில் சார்பில், ஐந்தாவது சர்வதேச இளைஞர் மன்ற மாநாடு, தாய்லாந்தின் பாங்காங் நகரில் ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியா உட்பட 62 நாடுகளில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து 8 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்த அறிவு, சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்கள் பள்ளி சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
இம்மாணவர்கள் தமிழ்நாட்டில் சிறந்த செயல்பாடுகளை ஒரு நிமிட வீடியோவாக சமர்ப்பித்தனர். இதில் பள்ளிக்கல்வி துறையால் தேர்வு செய்யப்பட்ட தலா 3 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியர் அரசு பள்ளிகள் சார்பில் பாங்காங் அழைத்துச்செல்லப்பட்டனர்.
நமது மாவட்டத்தில் இருந்து கீரம்பூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்1 வகுப்பு பயிலும் யாழினி மற்றும் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் கமலேஷ் ஆகியோர், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் பிராண்டு தூதர்களாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து வகையிலும் உங்களை ஊக்கப்படுத்துவதற்கு அரசு தயாராக உள்ளது. அனைத்துத் துறை அலுவலர்களும் அரசின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், உயர்கல்வி பயில வந்தவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) செல்வராசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, கேஎஸ்ஆர் கல்லூரி இயக்குனர் பேராசிரியர் மோகன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
