×

3ம் கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து செப்டம்பர் முதல் 125 மின்சார பேருந்துகள் இயக்க முடிவு: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

 

சென்னை: மூன்றாம் கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து செப்டம்பர் மாதம் முதல் 125 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் செலவை குறைக்கும் வகையிலும், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையிலும், டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, உலக வங்கியின் உதவியுடன், மொத்த விலை ஒப்பந்தத்தில், 1,225 மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக, அசோக் லெலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்திடமிருந்து 625 பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி ரூ.208 கோடியில் 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமானப் பணிகள், பராமரிப்புக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.47.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட மின்சாரப் பேருந்து பணிமனையை வியாசர்பாடியில் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மேலும் 135 மின்சார பேருந்துகள் சேவை பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து இயக்கப்பட்டன. இந்தநிலையில், 3வது கட்டமாக 125 மின்சார பேருந்துகள் பூந்தமல்லி பணிமனையில் இருந்து இயக்கப்பட உள்ளதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: ‘போக்குவரத்து கழக பேருந்துகளை நவீனப்படுத்தும் நோக்கில் தாழ்தள மின்சார பேருந்துகள், மின்சார குளிர்சாதன பேருந்துகள் சென்னையில் இயக்கப்பட்டு வருகின்றன’.

அந்தவகையில் 625 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் வியாசர்பாடி மற்றும் பெரும்பாக்கம் பணிமனைகளிலிருந்து 225 மின்சார பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மூன்றாம்கட்ட சேவையை வழங்கும் வகையில் பூந்தமல்லி பணிமனையிலிருந்து 125 மின்சார பேருந்துகளை செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளோம். இதற்கான மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான கட்டமைப்பை பூந்தமல்லி பணிமனையில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். ஓட்டுநர் மற்றும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெறவுள்ளன. அதேபோல், 25 சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் பல்வேறு வழித்தடங்களில் புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால் புறநகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எளிதில் பயணம் மேற்கொள்ள இவை ஏதுவாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Poonamallee depot ,Transport Department ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED அரசு பணிகளில் இட ஒதுக்கீடு...