×

முதுகுளத்தூர் அருகே தடுப்புச்சுவரை சேதப்படுத்தி கற்கள் திருட்டு: மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு

சாயல்குடி, டிச.15: முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் பொதுப்பணித்துறை கண்மாய் கரையில் மண் அரிமானத்தை தடுக்க அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் பாறைகள் திருடு போய் வருவதால், தடுப்புச்சுவர் சேதமடைந்து மண் சரிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
முதுகுளத்தூரில் இருந்து கடலாடி வழியாக சாயல்குடி செல்லும் தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள கீழச்சாக்குளம் பொதுப்பணித்துறை கண்மாய் கரை பிரதான சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது. இதனால் கண்மாய் கரையோரம் சில இடங்களில் மண் அரிமானத்தை தடுப்பதற்காக பாறைகளை கொண்டு தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளது.

தடுப்புச்சுவர் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டதால் கட்டுமானங்கள் சேதமடைந்து வருகிறது, சாலை பணிகள், சாலையோரம் செல்லும் குடிநீர் குழாய், தொலைதொடர்பு நிறுவனங்கள் கேபிள் பதிக்கும் பணிகள் நடக்கும் போது வாகனங்களால் மோதி சேதமடைந்து கிடக்கிறது.
இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் தடுப்புச்சுவரின் அடிப்பகுதியை வெட்டி, அதிலிருந்து பாறை கற்களை திருடி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்டுள்ளதால் தடுப்புச்சுவர்கள் மொத்தமாக பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் மழை பெய்தால் தோண்டப்பட்ட பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. சாலையில் செல்லும் இரண்டு வாகனங்கள் விலகும் போது பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தடுப்புச்சுவர் சேதத்தால் கரையில் மண் சரிந்து சாலையில் சிதறி வருகிறது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், இருசக்கர வாகனங்களுக்கு விபத்துகளை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.எனவே கட்டுமான கற்களை திருடி கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க பொதுப்பணி துறையும், சேதமடைந்த சாலையோரங்களை சீரமைக்க நெடுஞ்சாலை துறையும் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Theft ,Mudukulathur ,Landslide ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது