நாகர்கோவிலில் காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கத்தினர்முயற்சி

நாகர்கோவில், டிச.15: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகர்கோவிலில் காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் சங்கத்தினர் 59 பேர் கைது செய்யப்பட்டனர். வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் விவசாய அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குமரி மாவட்ட குழு சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து நேற்று காலை விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினரும் நாகர்கோவிலில் டெரிக் சந்திப்பில் திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார். அப்போது போலீசார் கே.பி ரோட்டில் பேரிகார்டுகளை அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தி அங்கேயே ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் டெரிக் சந்திப்பில் கோஷங்களை எழுப்பி விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மாநகர தலைவர் அலெக்ஸ், மார்க்சிஸ்ட் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சைமன் சைலஸ், துணை தலைவர் முருகேசன், சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் தங்கமோகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் என்.எஸ். கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 59 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலகம் மற்றும் டெரிக் சந்திப்பில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கே.பி ரோட்டில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது.

Related Stories:

>