ஓமனில் இருந்து தப்பி படகில் குமரிக்குள் நுழைந்த வங்காளதேச வாலிபரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு

நாகர்கோவில், டிச.15 : ஓமனில் இருந்து தப்பி குமரி மீனவர்களுடன், விசைப்படகில் வந்து கைதான வங்காளதேச வாலிபர், புழல் சிறைக்கு ெகாண்டு செல்லப்பட்டார். அவருடன் கைதான குமரி மீனவர்கள் 5 பேர், நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் முட்டம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சகாய ததேயூஸ் (46), ஸ்டீபன் (52), அல்டோ (28), ஜோசப் எட்வின் (40), பிரான்சிஸ் (58) ஆகியோர் ஓமன் நாட்டை சேர்ந்த அப்துல்லா என்பவரது விசைப்படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இவர்களுடன் வங்காள தேசத்தை சேர்ந்த முகமது ரஜிப் ஓடீன் (27) என்பவரும் இருந்தார். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. தூதரக அதிகாரிகளிடம் முறையிட்ட பின்னர், படகு உரிமையாளர் தரப்பில் மீனவர்களை தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது.

 இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர், வங்கதேசத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் என மொத்தம் 6 பேரும் விசைப்படகிலேயே தப்பி நேற்று  முன் தினம் அதிகாலையில் குமரி மாவட்டம் முட்டம் தனியார் மீன் பிடி துறைமுகத்துக்கு வந்தனர். 8 நாட்கள் சுமார் 2,747 கி.மீ. தூரம் கடலில் பயணித்து குமரி மாவட்டம் வந்தனர். வெளிநாட்டு விசைப்படகு குமரி மாவட்டத்துக்குள் நுழைந்த தகவல் அறிந்ததும், குமரி கடலோர குழும காவல் நிலைய போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மீனவர்கள் தங்களுக்கு, சம்பளம் தராமல் தாக்கி கொடுமைப்படுத்தியதை தொடர்ந்து தப்பிவந்த தகவலை கூறினர். இது பற்றி மீன் வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்த தகவல் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் மீது, அனுமதியின்றி வெளிநாட்டு படகில் குமரி மாவட்டத்துக்கு வந்ததாகவும், வங்காளதேச மீனவர் மீது எந்த ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குள் விசைப்படகில் ரகசியமாக நுழைந்ததாகவும்  குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இவர்கள் 6 பேரையும் நேற்று முன் தினம் மாலை கைது செய்தனர். இவர்கள் 6 பேரையும் நேற்று காலை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இவர்கள் 6 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேரும் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். வங்காள தேசத்தை சேர்ந்த மீனவர் முகமது ரஜிப் ஓடீன் சென்னை புழல் சிறைக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டார்.

Related Stories:

>