×

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வில் 98 சதவீத மாணவிகள் தோல்வி

நாகர்கோவில், டிச.15: தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு தமிழக அரசின் கொரோனா ஊரடங்கு வேளையில் நவம்பர் 21 முதல் அக்டோபர் 7ம் தேதி வரை தமிழகத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 98 சதவீத மாணவிகள் தோல்வியடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் இருந்து 60 பேர் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இது மாணவிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 கொரோனா பரவல் வேளையில் போக்குவரத்து வசதி முழுமைப்படுத்தப்படாத நிலையில் தங்கும் விடுதிகள் திறக்கப்படாத நிலையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. பல மாவட்டங்களில் ஒரே ஒரு தேர்வு மையம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டிருந்தது. இடைவெளியின்றி தொடர்ச்சியாக 14 நாட்கள் தேர்வு நடத்தப்பட்டது. அனைத்து விதமான பட்ட படிப்புகளுக்கும் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவிகளுக்கு மட்டும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கு அப்போதே பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் தேர்வு எழுதிய மாணவிகள் 98 சதவீதம் பேரும் தோல்வியடைந்துள்ளனர். இதனால் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டதா? என்ற கேள்வியை மாணவிகள் எழுப்பியுள்ளனர். தங்களின் ஆசிரியர் கனவு அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனைப்படுகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறியதாவது: மாணவிகள் அனைவரும் தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டதாக உணருகிறோம். மேலும் அனைவரும் தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘ஆன்சர் கீ’ தயாரிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு இருக்கலாம். ஆசிரியர் கல்வி இயக்கம் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த அநீதி இழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல படிப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்ற காலகட்டத்தில் ஆசிரியர் பட்டய பயிற்சி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளை தொடர்ச்சியாக 14 நாட்கள் தேர்வு மையம் வரவைத்து அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி தேர்வு எழுத வைத்து அனைவரையும் தோல்வியடைய செய்ய காரணம் என்ன என்பது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு எஸ்சிஇஆர்டியின் கீழ் பணிபுரியாத கல்வியாளர்கள் மற்றும் நீதியரசர்கள் கொண்ட ஒரு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். ஆசிரியர் படிப்பு ஒரு திறன்சார்ந்த படிப்பு ஆகும். இதில் 98 சதவீத மாணவிகளை தோல்வியடைய செய்தல் என்பது எந்த நாட்டிலும் நடக்காத அநீதியாகும். இது ஒரு திட்டமிட்ட செயலாகவே கருதுகிறோம்’ என்றனர்.
இது தொடர்பாக மாணவிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்தும் மனு அளித்தனர்.

Tags : Primary Education Teacher Charter Examination ,
× RELATED தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி...