×

குண்டு காயமடைந்த பெண் விவகாரம் முரணான பதிலால் போலீசார் குழப்பம்

மணப்பாறை, டிச.15: மணப்பாறையை அடுத்த வீரமலை வனப்பகுதி அடிவாரத்தில் கடந்த சில நாட்களாக ராணுவத்தின் பல்வேறு பிரிவு வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 12ம் தேதி மாலை பூசாரிபட்டியை சேர்ந்த நல்லம்மாள் என்பவர் தனது மாட்டை காணவில்லை என வனப்பகுதியில் தேடி சென்றதாக கூறப்பட்டது. அப்போது ராணுவத்தினர் சுட்ட குண்டு, மலை பகுதியில் உள்ள பாறைகளின் மீது விழுந்து அதில் சிதறிய துகள்ல்கள் அவ்வழியாக வந்த நல்லம்மாள் வலது தொடையில் பட்டு கிழித்ததில் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து நல்லம்மாள் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மணப்பாறை டிஎஸ்பி., பிருந்தா, வையம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது நல்லம்மாள் வனப்பகுதிக்கு சென்றது குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது தெளிவான பதில் கிடைக்கவில்லை. நல்லம்மாள் வனப்பகுதிக்கு சென்ற நேரம், குறித்து பல்வேறு முரண்பட்ட பதில்களால் போலீசார் குழப்பம் அடைந்தனர். மேலும், துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர்களால் ஏவப்படும் குண்டுகளின் சத்தம் 3 கி.மீ. வரை இடியோசைபோல் கேட்பதால், மாடு எப்படி அந்த சத்தத்தை தாங்கிக் கொண்டு வனப்பகுதியினுள் சென்று இருக்க முடியும். எனவே, மாடு வனப்பகுதியில் சென்றிருக்க வாய்ப்பில்லை என போலீசார் முடிவுக்கு வந்துள்ளனர். எனவே, நல்லம்மாள் படுகாயத்தின் உண்மை தன்மை என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags : bombing ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை