×

பராமரிக்க முடியாத பெற்றோர் தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தைகளை ஒப்படையுங்கள்

திருவாரூர், டிச.15: குழந்தைகளை பராமரிக்க முடியாத பெற்றோர்கள் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்குமாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழ கொத்தெரு காளியம்மன் கோவில் பின்புறத்தில் இருந்து வரும் குப்பைமேடு ஒன்றில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்று நேற்று காலை அனாதையாக கிடந்தது. தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குழந்தையை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அந்த குழந்தையை கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, பின்னர் அவர் கூறியதாவது, திருவாரூர் நகராட்சி பகுதியில் அனாதையாக விடப்பட்ட பெண் சிசு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பெற்றோரால் வளர்க்க முடியாத நிலையில் உள்ள குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பாதுகாப்பதற்கு தொட்டில் குழந்தை திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் என ஏதேனும் ஒன்றில் குழந்தையை ஒப்படைக்கலாம். இவ்வாறு பெறப்படும் குழந்தைகள் அரசு காப்பகத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு குழந்தை இல்லாதவர்களுக்கு தத்து கொடுக்கப்படும். எனவே இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகளை விட்டுச் செல்வது சமூகக் குற்றமாகும். எனவே பொதுமக்களும், இளம்பெண்களும், அவரை சுற்றியுள்ளவர்களும் இதுபோன்று அனாதையாக விட்டுச் செல்பவர்களை கண்டுபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், குழந்தையை பராமரிக்க முடியாதவர்கள் தொட்டில் குழந்தை கூட்டத்தில் விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : babies ,
× RELATED லீப் வருடத்தில் பிறந்த 9 குழந்தைகள் 4...