கல்வராயன்மலை, ஆக.29: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வசித்து வரும் மலைவாழ் மக்களில் சிலர் அடர்ந்த வனப்பகுதியில் இன்றளவும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்த உள்ளூர் போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் கல்வராயன்மலையில் உள்ள தும்பரம்பட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை வைத்து திருட்டுத்தனமாக துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்து வருவதாக கரியாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் இன்ஸ்ெபக்டர்கள் கச்சிராயபாளையம் ஏழுமலை, கரியாலூர் குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை தும்பரம்பட்டு வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் தகர கொட்டகை அமைத்து அங்கு தங்கியிருந்த ராஜமாணிக்கம் மகன் கோவிந்தன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், நாட்டு துப்பாக்கி தயாரித்து வந்ததையும், ஒரு நாட்டு துப்பாக்கி ரூ.15000 முதல் 20,0000 வரை விற்பனை செய்து வருவதாகவும் கோவிந்தன் ஒப்புக்கொண்டுள்ளான். இதையடுத்து கோவிந்தன் மீது கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி தயாரிக்க பயன்படும் உபகரணங்கள் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தும் கட்டை உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
