அம்பை, ஆக.29: அம்பையில் பைக் மீது லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் செங்குந்தர் தெருவைச் சேர்ந்த நெல்லைக்குமரனின் மகன் மகேஸ்வரன் (34), திருமணம் ஆகாத இவர், தென்காசி ரோட்டில் இருந்து அம்பையை இணைக்கும் புதிய புறவழிச் சாலையில் தனது பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியும், இவரது பைக்கும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்துவந்த அம்பை போலீசார், மகேஷ்வரனின் உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
