உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

தஞ்சை, டிச. 15: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அப்போது கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்ததாவது: தஞ்சை மாவட்டத்தில் எச்ஐவி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கான பிரசவம் அதிகளவில் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் நடக்கிறது. இத்தகைய சீரிய முயற்சியால் தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களிடையே 2015ம் ஆண்டில் 0.30 சதவீதம் இருந்த பாதிப்பு தற்போது 0.18 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் கர்ப்பிணி தாய்மார்களிடையே 2015ம் ஆண்டில் பாதிப்பு 0.05 சதவீதத்தில் இருந்து தற்போது 0.02 சதவீதமாக குறைந்துள்ளது.

எச்ஐவி, எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 2019-20ம் ஆண்டில் 166 குழந்தைகளுக்கு ரூ.4.34 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் எச்ஐவி, எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. கூட்டு சிகிச்சை பெறுவோருக்கு மாவட்ட இலவச சட்ட மையம் மூலமாக சட்ட ஆலோசனை மற்றும் உதவிகள் கூட்டு சிகிச்சை மையத்திலேயே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். பின்னர் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டு கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இணை இயக்குனர் ராமு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன், காசநோய் துணை இயக்குனர் மாதவி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் பசுபதீஸ்வரன் (பொ) பங்கேற்றனர்.

Related Stories:

>