×

ஆம்பூர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 191 நபர்களில் 161 பேர் 7 வழக்குகளில் விடுதலை செய்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆம்பூர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 191 நபர்களில் 161 பேர் 7 வழக்குகளில் விடுதலை செய்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா( 25). இவர் 2015ம் ஆண்டு மே மாதம் 24ந் தேதி காணாமல் போனார்.

இதுதொடர்பாக அவரது கணவர் பழனி கொடுத்த புகாரின்பேரில் அந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஷமீல்அகமது (26) என்பவரை பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மார்ட்டின், பிரேம்ராஜ் விசாரணைக்காக அழைத்துச்சென்றார். அப்போது, உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷமீல்அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் ஆம்பூரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜூன் 27-ந் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஷமில்அகமது மரணத்துக்கு காரணமான போலீசாரை கைது செய்ய வலியுறுத்தியும், பணியிலிருந்து நீக்கவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போலீசார் உள்பட 91 பேர் படுகாயமடைந்தனர். அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், 7 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன தீயிட்டு கொளுத்தப்பட்டன. தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரத்தில் தொடர்புடைய 191 பேர் மீது போலீசார் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆம்பூர் கலவரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு 28-ந் தேதி வழங்கப்படும் என நீதிபதி மீனாகுமாரி கூறி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதி மீனாகுமாரி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மொத்தமாக 191 நபர்களில் 161 பேரை விடுதலை செய்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார். 7 கட்டமாக பதியப்பட்ட வழக்குகளில் 6 கட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 161 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக வழக்கு பதியப்பட்ட 14 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். முதல் 26 பேர், பின்னர் 35 பேர், 3வது பிரிவில் 34 பேர் உட்பட 161 விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

Tags : Ampur riots 161 ,Tirupathur District Court ,Tirupathur ,Tirupathur Ampur riots ,Palani ,Skoligonda Kuchippalayam ,Vellore district ,Bavithra ,
× RELATED சென்னை அண்ணா சாலையில் உள்ள...