×

5 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசின் தேசிய தர நிர்ணய விருது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசின் தேசிய தர நிர்ணய விருது வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய தர நிர்ணய வாரிய சான்றிதழ் பெற்றுள்ள அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அதனை தொடர்ந்து அமைச்சர் முன்னிலையில் பிறகு இந்தியன் வங்கி நிதி பங்களிப்புடன் ரூ.15 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது.

பிறகு அவர் நிருபர்களிட்ம் கூறியதாவது: இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்ளது. மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றது. ஒன்றிய அரசின் சார்பில் தேசிய தர நிர்ணய வாரிய சான்றிதழ் தமிழ்நாட்டில் ஐந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளுவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமாரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று ஐந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் விருதுகள் கடந்த 4.5 ஆண்டுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஏறக்குறைய 1600 விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த 1600 விருதுகளில் இன்று கிடைக்கப் பெற்றுள்ள 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான விருதுகள் பெரிய மகுடம் போன்றவை. இது போன்ற விருதுகளை பெறுவதற்கு உழைத்த மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவ பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.

அது மட்டுமல்லாமல் இந்த மருத்துவமனைக்கு இந்தியன் வங்கி சார்பில் ரூ.15 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக இந்தியன் வங்கிக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் தேரணிராஜன், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரிகரன், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன் காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரவிந்த், சென்னை ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குனர் மணி மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Union Government ,State Medical College Hospitals ,Minister ,Subramanian ,Chennai ,Government Medical College Hospitals ,Tamil Nadu ,MLA ,National Standardization Board ,Government Medical College Hospital ,Omandurar Government Garden, Chennai ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...