சென்னை: அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி இன்று அமலுக்கு வந்துள்ளதால் தமிழ்நாட்டின் முக்கிய தொழில் துறைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது. இந்த வரி உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 48.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் தற்போது வரி கட்டாயத்திற்குள் வருகின்றன. இதனால் எஃகு, அலுமினியம், தாமிரம், வாகன உதிரிப்பாகங்கள் போன்ற துறைகள் மீது அதிக பாதிப்பு ஏற்படும். இவை மட்டும் 8.9 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதியாகின்றன.
மின்னணு துறை
இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு. ஸ்மார்ட்போன் உதிரிபாக உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 30% மற்றும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் 40% தமிழ்நாட்டிலிருந்து நடைபெறுகிறது.
உற்பத்தி துறை (கோவை)
கோவையில் இருந்து ஆண்டுக்கு ரூ.4,000 கோடி மதிப்பிலான பம்ப்கள், வால்வுகள், கனரக ஆட்டோ உதிரிப்பாகங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்க வரி விதிப்பு காரணமாக இவற்றுக்கான புதிய ஆர்டர்கள் முடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐடி துறை
ஐடி சேவைகள் வரி விதிப்புக்குள் வராதபோதிலும், டாலர் மதிப்பின் ஏற்ற இறக்கத்தால் வருவாயில் சிறிய பாதிப்பு ஏற்படும்.
ஜவுளித் துறை (திருப்பூர்)
ஆண்டுக்கு ரூ.70,000 கோடி மதிப்பில் உற்பத்தி செய்யும் திருப்பூர், ரூ.12,000 கோடி மதிப்பிலான ஜவுளி பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. தற்போது, வரி உயர்வால் அமெரிக்க வணிகர்கள் சில ஆர்டர்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடல் உணவுத் துறை
அமெரிக்காவின் கடல் உணவுப் பொருட்கள் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 26.5% ஆகும். வரி உயர்வு இந்த துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வரி உயர்வு, தமிழ்நாட்டின் பல முக்கியமான ஏற்றுமதி துறைகளில் உறுதியற்றத்தன்மையையும், வருவாய் இழப்பையும் உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
