டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி, டிச.15: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் ஊட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவையும் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 19 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை 6 விவசாயிகள் போராட்ட களத்தில் உயிரிழந்துள்ளனர். அரசுடன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இவர்களுக்கு ஆதரவாக ஊட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் போஜராஜ், பெள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி போராட்டம் முடிவுக்கு வரும் வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால், நீலகிரியின் காலநிலையை கருத்தில் கொண்டு காத்திருப்பு ேபாராட்டத்திற்கு பதிலாக ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கருதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories:

>