×

கொரோனா ஊரடங்கு தளர்வால் மீண்டும் டாப்சிலிப் திறக்கப்படுமா?

பொள்ளாச்சி, டிச.15:  கொரோனா ஊரடங்கு பெருமளவு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் டாப்சிலிப் திறக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிகளில் ஒன்றான டாப்சிலிப் வனப்பகுதிக்கு, தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருவோர் அடந்த வனப்பகுதியை சுற்றி பார்ப்பதுடன், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யானை சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு இருந்தது. அந்நேரத்தில் அங்கு யானை சவாரி தொடர்ந்திருந்தது. பின்னர் வெயிலின் தாக்கத்தால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் துவக்கம் வரையிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவானது.

இருப்பினும் கோடை விடுமுறை நாட்களில் பயணிகள் அதிகம் வருவார்கள் என்பதால் பராமரிப்பு பணி மேற்கொண்டு டாப்சிலிப்பை வனத்துறையினர் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் மார்ச் 25ம் தேதியிலிருந்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் போனது. கொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பால் 7 மாதத்தில் மட்டும் சுமார் ரூ.1 கோடி வரையிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு முழுமையான தளர்வால், ஆனைமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட குரங்கு அருவிக்கு நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ெவளியூர் பயணிகள் அதிகம் வந்து செல்லும் டாப்சிலிப் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. மீண்டும் டாப்சிலிப் திறக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். ஊரடங்கு பெருமளவு தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும்,  முறையான உத்தரவு வரபெற்றால் மட்டுமே டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளிக்கப்படும். அதுவரையிலும், டாப்சிலிப் மூடப்பட்டிருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Topslip ,
× RELATED டாப்சிலிப்பில் உலக யானைகள் தின கொண்டாட்டம்