- மதுரை கார்ப்பரேஷன்
- உயர் நீதிமன்றம்
- மதுரை
- உயர் நீதிமன்றக் கிளை
- 83வது வார்டு
- அஇஅதிமுக
- கவுன்சிலர்
- ரவி
- நீதிமன்றம்...
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் சொத்துக்களை மறு அளவீடு செய்ய குழுக்கள் அமைப்பதற்கு பாராட்டு தெரிவித்த ஐகோர்ட் கிளை, இதனை அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி 83வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாநகராட்சியில் சில கட்டிடங்களுக்கு வணிக வரிக்கு பதிலாக, குடியிருப்பு வரியாக மாற்றி நிர்ணயம் செய்தும், குடியிருப்பு கட்டிடங்களுக்கு வரி குறைப்பு செய்தும் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, டிஐஜி அபினவ்குமார் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு மறு அளவீடு செய்வது, புகைப்படத்தை பதிவேற்றம் செய்து டிஜிட்டல் ஐடி கார்டுகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதற்கென மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் 100 தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும். குரூப் 3 அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர்கள் இருப்பர். இந்தப் பணிகளை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 11 நபர்களைக் கொண்ட குழு மற்றும் வருவாய்த்துறை துணை ஆணையரால் கண்காணிக்கப்படும்’’ என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், ‘‘பொதுமக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை தரமாக செய்து கொடுங்கள். மதுரை மாநகராட்சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது. இதனை அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கைகள் குறித்து மதுரை மாநகராட்சி தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அக். 27க்கு தள்ளி வைத்தனர். விசாரணையின்போது மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனால் தாக்கல் செய்யப்பட்ட செயல்திட்ட அறிக்கைக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
