×

இன்னும் இரண்டு, மூன்று மாநாடுகள் நடத்தினாலே ‘காலி பெருங்காய டப்பா’ போல் விஜய் காலியாகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு

சென்னை: அனைத்து தரப்பில் விமர்சனங்களையும் தாங்கி செல்லும் விஜய் இன்னும் இரண்டு, மூன்று மாநாடுகளை நடத்தினாலே காலி பெருங்காய டப்பா போல் ஆகிவிடுவார் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னை, கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயில் அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 200 மூத்த குடிமக்களுக்கு பயணவழி பைகளை வழங்கி, ஆன்மிக பயண பேருந்துகளை கொடியசைத்து அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கேரள அரசின் அழைப்பை ஏற்று உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் நானும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் மாநாட்டில் பங்கேற்க உள்ளோம். நயினார் நாகேந்திரனின் பயத்திற்கான முடிவு 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற சட்டமன்ற தொகுதியையே திமுக கைப்பற்றும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் திருக்கோயிலை மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஸ்ரீரங்கம் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும்.

விஜய் இருமாநாடுகளை முடித்திருக்கின்றார். அவர் இன்னும் இரண்டு, மூன்று மாநாடுகள் நடத்தினாலே காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார். அவரது உயரம் அவ்வளவுதான். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் பழனி, மங்கையர்க்கரசி, இணை ஆணையர்கள் ரேணுகாதேவி, முல்லை, உதவி ஆணையர்கள் சிவக்குமார், பாரதிராஜா, திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அசோக்குமார் மற்றும் அறங்காவலர்கள், திருக்கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vijay ,Minister ,Sekarbabu ,Chennai ,Kandakottam Muthukumaraswamy ,Temple ,Arupadai ,Veedu ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!