சின்னசேலம், ஆக. 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் (50). இவரும், அதே பகுதியை சேர்ந்த திருமால் என்பவரும் பக்கத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள். இருவருக்கும் பொது சந்து சம்பந்தமாக அடிக்கடி பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் பொது சந்தில் பிளாஸ்டிக் பாட்டில், டப்பா கிடந்துள்ளது. இதுசம்பந்தமாக கோபிநாத் மனைவி சுந்தரி சந்தில் யாரோ குப்பை போட்டுள்ளனர் என்று சத்தம் போட்டுக்கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து குப்பை போட்டது சம்பந்தமாக சுந்தரி-திருமால் இருதரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் அசிங்கமாக திட்டி தாக்கிக் கொண்டனர். அப்போது திருமால் கத்தியை எடுத்து வந்து கோபிநாத்தை தலையில் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இந்த கோஷ்டி மோதல் சம்பவத்தில் கோபிநாத் புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார், திருமால், அவரது மனைவி நைனாம்பாள் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே தகராறில் கோபிநாத் உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக திருமால் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் கோபிநாத் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
