மரவள்ளி விலை வீழ்ச்சியால் நஷ்டம்

ஈரோடு, டிச.15: மரவள்ளி விலை வீழ்ச்சி காரணமாக கடும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக முத்தரப்பு பேச்சுவார்த்தையில் விவசாயிகள் புகார் கூறினர். மரவள்ளி விலை வீழ்ச்சியை தடுப்பது குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிழங்கு அரவை ஆலைகளில் ஜவ்வரிசி கலப்படம் நடைபெறுகிறது. இதை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. கிழங்கில் மாவு சத்துக்கள் அளவிடும் போது பல விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர்.

அதைத்தடுக்க, அரசு தோட்டக்கலைத்துறை மையங்களில் மாவு அளவிடும் கருவியான பாயிண்ட் மெஷின்களை பொருத்த வேண்டும். விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த ஏற்றுமதி வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என்பதோடு ஜவ்வரிசி மீதான 5 சதவீத வரியை குறைக்க வேண்டும். மேலும், இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். கடந்தாண்டு ஒரு டன் மரவள்ளி கிழக்கு ரூ.6 ஆயிரத்திற்கு விற்ற நிலையில், இந்தாண்டு ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளதால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, டன் ரூ.7 ஆயிரமாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.  இவ்வாறு விவசாயிகள் கூறினர். இக்கூட்டத்தில், ஜவ்வரிசி ஆலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>