×

போர் போன்ற அவசர நிலைக் காலங்களில் வேண்டுமானால் மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடலாம் : உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி : சட்ட மசோதாக்களுக்கான கால நிர்ணயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு பதில் என்ன ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சட்ட மசோதாக்களுக்கான கால நிர்ணயம் மீது குடியரசு தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்றுடன் ஒன்றிய அரசு தரப்பு வாதங்களை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில், ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

2ஆவதாக ஒரு மசோதா நிறைவேற்றி அனுப்பினால் அதனை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியுமா?. ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் உள்ளதா?. மாநில அரசு நிறைவேற்றிய மசோதாவை ஒன்றிய அரசு திருப்பி அனுப்ப இயலுமா? அதன் விளைவுகள் என்ன? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சட்டமன்றத்தில் 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்ப இயலாது, ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு என்ன பதில் என்றும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

“போர் போன்ற அவசர நிலைக் காலங்களில் வேண்டுமானால் தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு என்ற அடிப்படையில், மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடலாம். ஆனால், சாதாரண நேரங்களில் மத்திய சட்டங்களுடன் முரணாக இல்லாத மாநில அரசின் மசோதாவில் எப்படி தலையிட முடியும்?” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. குடியரசு தலைவர் ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படுவது போல் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தானே? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ஆளுநர் மசோதாவை ஏன் நிறுத்தி வைத்துள்ளார் என்று நீதிமன்றம் கேள்வி கேட்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Tags : EU ,Supreme Court ,Delhi ,Tamil Nadu government ,President of the Republic ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...