- எம்ஜிஆர் திரைப்படப் பயிற்சி நிறுவனம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்
- தரமணி, சென்னை
- தலைமைச் செயலகம்…
சென்னை: சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.5.10 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளத்தை தலைமைசெயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந் நிறுவனத்தை மேலும் மேம்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி நலன்கருதியும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒப்பனை அறைகள், அலங்கார உடை அறை, உணவு அருந்தும் அறை ஆகியவை இணைந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய சுமார் 17,517 சதுர அடி படப்பிடிப்புத்தளம், பழைய மாணவர் விடுதி, நீதிமன்றம், சிறைச்சாலை, படப்பிடிப்புத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளிர்சாதனக் கருவிகள், இரண்டு புதிய மின்மாற்றிகள் மற்றும் இதர மின் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை ரூ.5.10 கோடி செலவில் முழு அளவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்த புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத் தளம் திரைப்படத்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் டிராட்ஸ்கி மருது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
