×

அடுத்தாண்டு ஜனவரி 9ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு: சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு

சென்னை: தேமுதிக மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி கடலூர் மாவட்டம் பாசார் கிராமம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை(வேப்பூர் அருகில்) விஜயகாந்த் திடலில் நடைபெற உள்ளது. மாலை 2.45 மணியளவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கொடியேற்றி, கலைநிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட தலைமை கழகம், மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளை கழகம், மகளிர் அணியினர் மற்றும் தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு தனியாக க்யூ ஆர் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை செல்போனில் ஸ்கேன் செய்தால், மாநாடு நடைபெறும் தேதி, இடம், நோக்கம் உள்ளிட்ட தகவல் கிடைக்கப் பெறும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா, யாருடன் கூட்டணி என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை தேமுதிக மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று பொதுச்செயலாளர் பிரேமலதா ஏற்கனவே கூறி வந்தார். இந்த நிலையில், தற்போது மாநாடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை பிரேமலதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Demudika ,Conference ,Cuddalore ,Chennai ,Demudika Conference ,Cuddalore district ,Demutika Chief Corporation ,People's Rights Recovery Conference of Temuthiga ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி