மழையால் மிளகாய் செடிகள் பாதிப்பு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

இளையான்குடி, டிச.11: தினகரன் செய்தி எதிரொலியாக இளையான்குடி பகுதியில் மழைக்கு சேதமடைந்த மிளகாய் பயிர்களை மாநில தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். இளையான்குடி, சூராணம், சாலைக்கிராமம் பகுதி கிராமங்களில் மிளகாய் விவசாயம் அதிகளவில் நடக்கிறது. இளையான்குடி வட்டாரத்தில் நடப்பாண்டில் 4 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பில் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து, விதைத்த மிளகாய் விதைகள் நன்றாக வளர்ந்து வந்தன. பூக்கும் தருவாயில் இருந்த மிளகாய் செடிகள் தொடர்மழை காரணமாக தண்ணீரில் மிதந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

சாலைக்கிராமம், சாத்தனி, அளவிடங்கான், சாத்தனூர், சூராணம், கோட்டையூர் பகுதிகளில் மிளகாய் விவசாயம் 70 சதவீதம் பாதிக்கப்பட்டது. எனவே மாவட்ட கலெக்டர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சாலைகிராமத்தில் சமுத்திரம், சூராணம் உள்ளிட்ட பகுதியில் மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்ட வயல்களை தோட்டக்கலைத்துறை மாநில குழு நேற்று இரவு ஆய்வு செய்தது. இதில் மாநில தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன், சிவகங்கை தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் அழகுமலை, உதவி இயக்குநர்கள் தர்மர், ரேகா, சந்திரசேகர் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சேத விபரங்களை கேட்டறிந்தார். தமிழக அரசிடம் தெரிவித்து நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>