நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் திமுக, அதிமுக சம பலத்தால் பரபரப்பு

சிவகங்கை, டிச.11: சிவக ங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி கவுன்சில் வார்டுகளில் அதிமுக சார்பில் 8 பேர், திமுக அணி சார்பில் 8 பேர் என சம பலத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் மறைமுக தேர்தல் ஜன.11 அன்று நடந்த நிலையில் சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்கான தேர்தல் போதிய கோரம் இல்லை என ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ஜன.30ல் இரண்டாவது முறையாகவும், மார்ச் 4ல் மூன்றாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டது.

நான்காவது முறை நடக்கும் கூட்டத்தில் வருகை தரும் உறுப்பினர்களில் இருந்து தேர்தல் நடத்தப்பட்டு கட்டாயம் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் நான்காவது கூட்டம் கடந்த ஏழு மாதங்களாக நடத்தப்படவில்லை. இப்பிரச்சனை தொடர்பாக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து டிச.4ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலும், பிற்பகல் 3 மணிக்கு துணை தலைவர் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சிவகங்கைக்கு கொரோனா ஆய்வுப்பணிக்கு டிச.4 அன்று தமிழக முதல்வர் வருகை தந்ததால் அன்றைய தினமும் தேர்தல் நடக்கவில்லை. இன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலும் பிற்பகல் 3 மணிக்கு துணைத்தலைவர் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று முறை திமுக கூட்டணி கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வருகை தந்தனர். நான்காம் முறை கூட்டமே நடக்கவில்லை. நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் இன்று நடக்க உள்ள நிலையில் அதிமுக, திமுக சம பலத்தில் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>