×

ஆர்.எஸ்.மங்கலத்தில் கஞ்சா புழக்கம் தாராளம் சீரழியும் இளைய தலைமுறை போலீசார் கட்டுப்படுத்துவார்களா?

ஆர்.எஸ்.மங்கலம், டிச.11: ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் கஞ்சா புழக்கம்  அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுத்திட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அச்சத்தினால் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் விடுமுறையில் வீடுகளில் உள்ளனர். இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்தே இந்த கஞ்சா விற்பனை கும்பல் செயல்படுகிறது. இதனால் அதிகளவில் மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

ஒரு சில பகுதியில் கஞ்சாவிற்கு அடிமையானவர்கள் மற்ற மாணவர்களையும், இளைஞர்களையும் அடிமையாக்கி வருகின்றனர். குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, பூவாணிப்பேட்டை, கீழக்கோட்டை, கோழியார்கோட்டை,  பரம்பைரோடு உள்ளிட்ட பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகின்றன. எனவே போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய தலைமுறையினரை காப்பாற்ற முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : generation ,Mangalam ,
× RELATED தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம்...