×

திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் திருப்பரங்குனறம் யூனியனில் பரபரப்பு

திருப்பரங்குன்றம், டிச. 11:  திருப்பரங்குன்றம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று திருநகரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. சேர்மன் (திமுக) வேட்டையன் தலைமை வகிக்க, ஆணையாளர் ஆசிக் முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், திமுக- அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதுமே, திமுக கவுன்சிலர்கள் திடீரென எழுந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது திமுக கவுன்சிலர் சுரேஷ் பேசுகையில், ‘சின்னசாக்கலிபட்டி பகுதியில் குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதுடன், குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது என்றார். பின்னர் திமுக கவுன்சிலர்கள் கூறுகையில், ‘வார்டுகளில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்தும், மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம் அதிமுக கவுன்சிலர்கள் வார்டுக்கு மட்டும் அதிகாரிகள் தனிகவனம் செலுத்தி திட்டங்களை நிறைவேற்றுகின்றனர். திமுக கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் ஆளும்கட்சியினருக்கு பயந்து அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர்’ என்றனர்.

Tags : councilors ,DMK ,Thiruparankundram ,
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...