குடும்பம் நடத்த மனைவி வராத ஆத்திரத்தில் மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்

வேடசந்தூர், டிச. 11: குடும்பம் நடத்த மனைவி வராத ஆத்திரத்தில், மாமியாரை மருமகன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமதுரை முள்ளாம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பொண்ணு பாப்பா (55). இவர், கை கால் செயலிழந்த நிலையில் தனது வீட்டில் இருந்து வந்தார். இவரது மகள் பூங்கொடிக்கும் (32), கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நம்பாகவுண்டனூரைச் சேர்ந்த கனகராஜூக்கும் (40)  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பூங்கொடி வடமதுரையில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி அவரை பராமரித்து வந்தார்.

கனகராஜ் பலமுறை தனது ஊருக்கு அழைத்தும் பூங்கொடி வர மறுத்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று கனகராஜ் தனது மனைவியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். அதற்கு பூங்கொடி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கனகராஜ் அரிவாளால் தனது மாமியார் பொண்ணு பாப்பாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த வேடசந்தூர் டி.எஸ்.பி மகேஷ் மற்றும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொண்ணுபாப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் கனகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>