×

மண்டைக்காடு கோயிலில் இன்று வலிய படுக்கை பூஜை அம்மனுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்கள் படைக்கப்படுகிறது

குளச்சல், டிச.11: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் வலிய படுக்கை என்னும் மகா பூஜை இன்று இரவு நடக்கிறது. குமரி  மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன்  கோயிலும் ஒன்று. கேரள பெண்கள் இருமுடிகட்டு கட்டி வந்து அம்மனை தரிசிப்பதால் இது  பெண்களின் சபரி மலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு நடக்கும் வலிய படுக்கை  என்ற மகா பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. மாசிப்  பெருந்திருவிழாவின் 6வது நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரம் நாள்,  கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என்று வருடத்தில் 3  முறை மட்டுமே இந்த  பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  அதன்படி இன்று கார்த்திகை மாத  கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். அதைத் தொடர்ந்து இன்று வலிய படுக்கை பூஜை  நடக்கிறது. இதை முன்னிட்டு  காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்படுகிறது.  தொடர்ந்து 5.30 க்கு பஞ்சாபிஷேகம், 6.30 க்கு உஷபூஜை, மதியம் 12க்கு உச்ச  பூஜை, மாலை 6.30 க்கு அலங்கார தீபாராதனை, வில்லிசை ஆகியவை நடக்கிறது.

பின்னர்  இரவு 8.30க்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில்  பவனி  உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து நள்ளிரவு  வலிய  படுக்கை என்னும் மகா பூஜை நடக்கிறது.  இந்த பூஜையில் அம்மனுக்கு மிகவும்  பிடித்தமான பல்வேறு உணவு பதார்த்தங்கள் மற்றும்  பழ வகைகள்  படைக்கப்படுகிறது.அதன் பிறகு மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக  வழங்கப்படும். கடந்த  பங்குனி பரணி நட்சத்திரத்தன்று  நடந்த வலிய படுக்கை  பூஜை நாளில்  கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வலிய படுக்கை பூஜை    பக்தர்கள் இல்லாமல் நடந்தது குறிப்பிடத்தக்கது.இன்று நடக்கும் பூஜையில் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் உண்டு. ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் கோயிலில் அர்ச்சனை செய்யவோ, மண்டபத்தில் அமரவோ, தியானம் செய்யவோ, பிரகாரம் சுற்றி வரவோ அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என கோயில் மேலாளர் தெரிவித்தார்.

Tags : Valiya Padukka Puja ,Mandaikadu ,
× RELATED மண்டைக்காடு பெரிய சக்கர தீவெட்டி கமிட்டி மோதலில் 35 பேர் மீது வழக்கு